Saturday, October 30, 2010

அவன் க(வி)தையில் கடவுளும் கதறினார்.....


உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு  நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது


அழகாய் பிறந்தான் ஒருவன் அவன்..
இறைவன் சிரித்தார்..
அவன் பிறப்பின் முதல் கதறலைக் கண்டு,

குப்புறப் படுத்தான்,,,
தவழ்ந்தான்,,,,
நடந்தான்....

முன்னொருக் காலத்தில் வாழ்ந்த எவனோ,
பணம் என்ற ஒன்றை கண்டுப் பிடித்திருக்கிறான்...
என்பதை அறிகிறான் அவன்...

கல்விக்காக அவன் சில காலம் ஒடுகிறான்...

பணத்திற்காக அவன் பல காலம் ஒடுகிறான் வாழ்நாளில்...

கல்வி அவன் பதவிக்காகவும்,
பதவி அவன் பணத்திற்காகவும்,
பணம் அவன் தேவைகளுக்காகவும்...

அவனுடைய சிறு வயது பொம்மைகளை,
அவன் வீட்டு அலமாரியில் தொலைத்த போதும்,
அவனுக்குப் புரியவில்லை...

துவிச் சக்கர வண்டியின் வருகையால்,
மிதிவண்டியை,
அவன் வீட்டுத் தோட்டத்தில் தொலைத்த போதும்,
அவனுக்குப் புரியவில்லை...

ஆசை ஆசையாய்,
வருடக் கணக்காய் காதலித்தவளை,
அவன் வீட்டு சமயலறையில்,
தொலைக்கும் போது மட்டும்,
அவனுக்கு கொஞ்சம் புரிந்திருந்தது...

இருந்தாலும் தேவைகள் துரத்தியது..
தேடிக் கொண்டு ஒடினான்..

தேடி முடித்தவுடன் தொலைப்பது தான்,
அவன் வாழ்க்கை எனத் தெரிந்தும்,
அவன் தேடல்களும்,
தேவைகளின் ஓட்டங்களும் என்றுமே நின்றதில்லை...

கூனாகினான்..
தள்ளாடினான்..
படுத்தான்....

எங்கோ ஒரு குரல் கேட்கிறது...
அவன் சற்றே நிமிர்ந்து பார்க்கிறான்...
அங்கு, அவனுக்கு எமனால் இறப்பு அறிவிக்கப்படுகிறது....

இறப்பை நோக்கி ஒடி வரும்,
எனக்குத் தான் இத்தனை தேவைகளா?

அலறுகிறான் அவன் - இறப்பிற்காக அல்ல...
அவனெடுத்தப் பிறவியில்,
அவனுக்கு கடைசிவரை,
வாழ்வதற்கான நேரத்தையே,
இறைவன் கொடுக்க இல்லையாம்...
இறைவனிடம் முறையிட்டான்...
அவன் யாரோ ஒரு மனிதனாம்...

அவனின் கடைசிக் கதறலைக் கண்டு,
இறைவனும் கதறினார்...

உன் பிறப்பு என் கையில்...
உன் இறப்பு எமன் கையில்...
உன் வாழ்வு உன் கையிலடா...!!!

Download As PDF

No comments:

Post a Comment